Mar 30, 2010

முன் தின மறுநாள்




முன் தின மறுநாள்
யாமம் களவுகொடுத்த வைகறையில்
செந்நிறப்பட்டு உடுத்தி
செஞ்சாந்து பொட்டிட்டு
மஞ்சள் பூசிய முகமும்
இதழ் மலரும் புன்னகையுடன்
நீ வருகிறாய்
குளிர்பொருட்டின்று நிற்கிறேன்
உன் தரிசனம் காண

நீயோ சிம்மபல்லக்கில்
வாணவேடிக்கையும்
மேளதாளம் முழங்க
கம்பீரமாய் பவனி வருகிறாய் ...
உன் பக்தர்களுக்கு அருள்புரிய
திருவிழா தித்திக்கும் விழாவானது

Mar 29, 2010

அவள் பெயர் எழிலரசி ...


நீ வருவதாய் சொன்னார்கள்
மரத்தடி சிகையலங்காரம்
கருவேலம் மாற்றாக பற்பசை
உன் நினைவுகளில் குளியல்
பழைய தீவாவளி துணி
இரவல் கைகடிகாரம்
அம்மன் திருநீறு
துடைத்த மிதிவண்டி
புது சந்தை செருப்புடன்
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருக்கிறேன் உனக்காக !

நீ பயணிக்கையில்
விரைவு பேருந்து கூட
மெதுவாய் ஊரும்
மிதவை பேருந்து போல...
ஊர்ந்து வந்து நின்றது
படிகளில் பவளச்சிலையாக
இறங்குகிறாய் நீ ... !

உனைத்தவிர அனைத்தும்
மறைந்துவிட்டது எனக்கு உன்
அலைபேசியில் வசீகரா பாடல்
சிணுங்க இதழோடு இருக்கமாய்
கொஞ்சி கொஞ்சி பேசுகிறாய் நீ ...
உனை பிறந்த கன்றுகுட்டி போல்
ரசிக்கின்றேன் நான்...

நீ அலைபேசியில் பேசிக்கொண்டே
"hey take this luggage... oh sorry ..."
என்று ஏதேதோ எழிலாய் பேசினாய்
பின் இதெல்லாம் எடுத்துக்கோ ...
இதில் இங்கடாச்செல்லம் வேறு

நகரத்தின் நாகரீகம்
உன் நகத்தில் தெரிந்தது
மருதாணி அன்றி நகப்பூச்சு ...
எழிலரசி வெறும் எழிலாய்...
நமை கடக்கிறது
பொதி சுமக்கும் கழுதை

காதலுக்கு
இந்த மாட்டுக்காரன் மட்டும்
விதிவிலக்கா என்ன ?
அனைத்தும் உண்டு
அவள் காதலுக்கு
பருவகாலத்திலேயே
மாற்றம் வர அவள்
பருவத்தில் வராதா?

என் வயதொத்த
ஆசிரிய நண்பரிடம்
என் நிலை பகிர ..
வாரம் ஒன்று கழித்து
வாசித்து காட்டினார்
வாரமலரில் கவிதையாக ...

Mar 28, 2010

ஞாயிறு மதியம்



ஞாயிறு மதியம்
குட்டித்தூக்கம் கண்களின்
மேல் தீராக் காதல்
சன்னலோரமாய் படுகையில்
தூக்கத்தின் காதலையாவது
நிறைவேற்ற ...

தீடீர்ரென்ற மின்வெட்டு
காற்றினை அனுமதிக்க
கதவினை திறக்கின்றேன்
எதிர் திண்ணையில் நீ

உன் கையில் சுஜாதாவின் நாவல்
உன் முகம் மறைத்து... புத்துணர்வின்
அர்த்தம் என்னுள் விளங்கியது

பழைய தினத்தந்தி என் கையில்
உன் எதிர் திண்ணையில் நான்
சாய்வு நாற்காலியில் தாத்தா
போய் வெற்றிலை வாங்கிவா என்று
இன்னும் நீ நாவலுக்குள் ...

உள்சென்று உடைகளுக்குள் புகுந்து
வெளியேவரும் வேளையில் உன் அம்மா
தெருமுனையில் கருவேப்பிலை
வங்கி வரச்சொல்லி... மாற்றமின்றி
நாவலுக்குள் உன் முகம்....

அம்மாவின் கட்டளை நிறைவேற்ற
உள்சென்று நாணயம் எடுக்க நீ ...
நாவல் மட்டும் திண்ணையை
முத்தமிட்டுக் கொண்டு ...

கள்ளத்தனமாய் நாவல் எடுக்கின்றேன்
நடுபக்கத்தில் நான் எழுதிய கடிதமும்
என் கடவுச்சீட்டு புகைப்படமும் ...

எறும்பின் ஏக்கம் ...



சுழல் நீரில் சிக்குண்ட
இலை மேல் நான்
முடிவுகள்.. சில நொடிகள்
தள்ளிப் பயணிக்கிறேன்

அச்சில நொடிகளில்
வாழ்வினை ரசிக்கும்
வரம் தந்த இறைவனை
மறவாமல்...

ஒருபுறம் விண்ணை
முட்டும் அல்லியும் தங்க
கதிரவனின் காதலியும்
என் கண்முன் ...

மறுபுறம் முரட்டு
வாய் பிளக்கும்
கெண்டை கெளுத்தியும்
சர்பம கொண்ட விஷமும் ...

எதை ரசிக்க எனை மறக்க
என்ற ஒரு சூழலில் சுழலின்று
விடுபட்டு மெல்லிய ஓடையில்
மிதமாய் பயணிக்கிறது
இலை மட்டும் ...

எச்சூழலிலும் வாழ்வினை
ரசித்திட வேண்டும் என்ற
எண்ணம் மட்டுமே...நான்
நீரில் முழ்கியவாறே ...

Mar 19, 2010

ச ரி க ம ப த நீ...அன்ன




எனை அழவைப்பதும் பின்
அரவணைப்பதும்

எனை விரும்புவதும் உனை
வெறுக்கவைப்பதும்

எனை கொஞ்சுவதும் பின்
கெஞ்சவைப்பதும்

எனை விலகுவதும் பின்
நெருங்கவைப்பதும்

எனை கோபப்படுத்துவதும் பின்
பொய் ஊடல் கொள்ளவைப்பதும்

எனை திமிர் நாடச்செய்தும் பின்
நாணப்பட வைப்பதும்

எனை காதலித்தும் பின்
காதல்பட வைத்ததும்

எனை எனக்கே பிடிக்கச்செய்தும்
பிறர் எனை மதிக்கச்செயததும்

நீ ..

ஓர் எழுத்தில் எழுதப்படாத
இரு வார்த்தைகள்...

பொய் சொல்லும் திருட்டே
மெய் சொல்லும் தமிழே
உயிர் கொண்ட உறவே
உயிர் கொண்ட அன்பே

காதலின் தவறே காதலின் பிரிவே
காதலின் தவிப்பே காதலின் தவமே
இவை யாவுமே நீ சொன்னால்
நான் உனை என்ன சொல்வேன்

உன் வார்த்தையில் நான் எனை தொலைத்தேன்
உன் அன்பிலே நான் மறந்தேன் என் தமிழே
உன் பாதையில் நான் தொலைத்தேன்
என் சுவடுகளை ...

உன் ஓர் பார்வையிலே சிக்கிதவிக்குதடி
என் வாழ்வின் ஓராயிரம் மணித்துளிகள் ...

தினந்தோறும்


தினந்தோறும்
வானவில் காண்கிறேன்
வைகறையிலும்
அந்திப்பொழுதிலும்
வெய்யோன்
உன் மேல்
விழும்போதெல்லாம் ...

வண்ணத்துபூச்சிகள்
வரலாறு கனாத
உண்ணாவிரதமாம் ...
மகரந்தத்தில் தேன்
இல்லையென்று
மலரென நினைத்து
உன்மேல்
தேன் உறிஞ்சியதால் ...

Mar 18, 2010

காதல் செய்து கிடப்பதே



பேருந்து நிறுத்தம்
கல்லூரி வாசல்
உன் தெருவோர டீகடை
காவல்நிலையம் நீதிமன்றம்
அதிகாரவர்கத்தால்... இன்று
மனநலமருத்துவமனை
ஒருதலைபட்சமான முடிவு....

இப்போதும் காதலிக்கிறேன்
முன்னெப்போதும் இல்லாத
நிம்மதியுடன்....

உனை அல்ல நம் காதலை ...
என் கடன் காதல் செய்து கிடப்பதே ...