Mar 10, 2010

மனைவியின் டைரிக் குறிப்புகள்


திருமணம்

இன்றுமுதல்
என் முகவரி
மாற்றம் ...

முதலிரவு

ஆடை களைந்து
மெய் வருத்தி
அவர் மார்பில்
துயில் கொண்ட இரவு ...

பேறுகாலம்

பனிக்குடத்தில் சுமக்கும்
சுகமான தொப்புள்கொடி உறவு
புளிப்பை விரும்பி இனிப்பை தவிர்த்த
ஈரைந்து மாதங்கள் ...

பிரசவம்

எந்தலைவனின் முகச்சாயலில்
நான் பெற்ற மற்றுமோர் மகவு
என் செல்லம் ...

உறவுகள்

மீண்டும் நான் மகளாகி
பெற்ற பெற்றோர் ...
குடும்ப அட்டையில்
பெயர் நீக்கி பெயர் பதித்த
புது சொந்தங்களின் பரிமாற்றம் ...

ஊடல்

நான் நாடும் விழைவு...அவர்
என் பெயர் சொல்லி அழைக்கும் நாள் !
இல்லையேல் எப்போதும் போல்
தங்கம் செல்லம் என்னடா மட்டுமே ...

விடுமுறை நாட்களில்
அவர் கை சுட்டுக்கொண்டு
சமைக்கும் சமையலில்
காரம் உப்பு குன்றும் ஆனால்
காதல் குன்றாமல் பரிமாறிய நாட்கள் ...

முதுமை

நடுங்கும் நரம்புகளில்
காதலை நேசித்து
முதுமையை விரட்ட
முயற்சி செய்த நாட்கள் ...

வாழ்கை

வரிகளில் சொல்வதென்றால்
தேனிலே ஊறிய செந்தமிழின்
சுவை போல ...

இறப்பு

என்னவனின் தமிழுக்காக
நான் விட்டுச்செல்லும் பக்கங்கள்
படிக்க நானில்லை
என்ற கவலையின்றி செல்கிறன்
அவரை முழுதாய் படித்த நம்பிக்கையில் ...

அவளுக்கான தமிழ்

அவள் என்ற சொல்லில்
புதைந்துள்ளது நான் மட்டுமே
என் பின் தூங்கி முன் எழுபவள்
எனைவிட்டு நிரந்தரமாய்
உறங்கிவிட்டாள்

எப்பிறப்பிலும் ஈடாகாது
யாதொரு தன்மையிலும்
அவள் என்மேல் காட்டிய அன்பு...

அவளின்றி உடற்றும் காலத்தில்
முள் கொண்ட படுகையில்
உறக்கத்தை தேடுவது போல..
தொண்டைக்குழி அடைக்கிறது ...

அது உணர்ந்தால் மட்டுமே புரியும்...

Mar 9, 2010

சற்றே இளைப்பாறுகிறது காதல்



உருவகம் உடுத்திய
உவமையாய் பாடல்களிலும்
உணர்வுகள் மோதும்
ஊடலாய் ஊடகத்திலும்
கவிஞன் மெருகேற்றும்
கருவாய் கவிதைகளிலும்
உலா வந்த காதல்...
நம்மிடம் சற்றே இளைப்பாறுகிறது
நீ வெட்கம் உடுத்தி அமர்ந்திருந்ததால்...

Mar 8, 2010

இரண்டெழுத்து கவிதையாக




மொட்டுகளாய் துளிர்த்து
சிறுமியாய் மலர்ந்து
பூவாய் பூப்பெய்து
மனைவியாய் சூல்முடி தரித்து
மீண்டும் மழலையை விதையாய்
விதைக்கிறாள்... தாய்மையால்
விளங்கப்பெறும் பெண்மை ...

அன்னையாய் அன்பையும்
சகோதரியாய் பாசத்தையும்
தோழியாய் நட்பையும்
மனைவியாய் இல்லறத்தையும்
காதலியாய் காதலையும்
பெண்ணாய் நம்பிக்கையும்
தருபவள்...அவள் என்னுள்
யாதுமாகி நிற்பவள்.... பெண்னென்ற
இரண்டெழுத்து கவிதையாக ...

Mar 7, 2010

என்னுள் காதலாகிவிட்டன




நான் படிக்காமலே எனக்கான
பாடங்கள் படிக்கப்பட்டன ...

நான் உறங்காது என்
கனவுகள் கடந்துவிட்டன ...

நான் மொழியாமலே எனக்கான
மௌனங்கள் தீர்ந்துவிட்டன ...

நான் காணாது எனக்கான
காட்சிகள் மறைந்துவிட்டன ...

நான் உணர்த்தாமலே அவள்
பெண்மை என்னுள் காதலாகிவிட்டன !

Mar 4, 2010

அவ்வீதி




உன் கைபிடித்து நடந்து வந்த வீதி
இன்று வெறுமையாய் காட்சியளிக்கிறது
உன்னுடன் நான் விரும்பிய தனிமை
இப்பொது வீதிக்கு கிடைதிருகின்றது
ஒவ்வோர் முறையும் அதில் நடக்கையில்
அது உன் நியாபகங்களையே
நியாபகப்படுத்தும் ...

பிறப்பு முதல் இறப்பு வரை
வரம் முதல் சாபம் வரை
அனைத்தையும் கண்ட அவ்வீதி
இன்று விதியின் பிடியில்

தீண்டாமைத் தொற்றுநோயால்
மனிதத்தின் வக்கிரமும் சமூகத்தின்
சலனமற்ற மூடநம்பிக்கைகளும்
அரசியல் சாயம் பூசிக்கொண்டு
யாருமற்ற தனிமையில் அவ்வீதி...

பாரத்துடன் வண்டி
இழுத்துச்செல்லும் முதியவர்
சீருடையில் பள்ளி குழந்தைகள்
மணலில் விளையாடும் மழலையை
கண்டிக்கும் தாய்
வீதியை பார்த்தவாறு திண்ணையில்
வெற்றிலை கொட்டும் மூதாட்டி ....

இப்போது யாருமில்லை
வீதி மட்டும் வீணாய் இருக்கிறது
முன்பிருந்த அழகினை
விட்டுக்கொடுதுவிட்டு...

Mar 1, 2010

குற்றத்தால் விளைந்த சுற்றம்..



இப்பூவுலகில் யாவரும்
குற்றம் செய்தவர்களே
நாம் உயிர்பெற
பிற உயிரணுக்களை
கொல்லும்போது...

Feb 26, 2010

நீராவி



சூரியக் காதலனால்
நீர் காதலி
காற்றுக்கணவனுடன்
கலந்துவிட்டாள்
நீராவியாய் ...