Mar 10, 2010
மனைவியின் டைரிக் குறிப்புகள்
திருமணம்
இன்றுமுதல்
என் முகவரி
மாற்றம் ...
முதலிரவு
ஆடை களைந்து
மெய் வருத்தி
அவர் மார்பில்
துயில் கொண்ட இரவு ...
பேறுகாலம்
பனிக்குடத்தில் சுமக்கும்
சுகமான தொப்புள்கொடி உறவு
புளிப்பை விரும்பி இனிப்பை தவிர்த்த
ஈரைந்து மாதங்கள் ...
பிரசவம்
எந்தலைவனின் முகச்சாயலில்
நான் பெற்ற மற்றுமோர் மகவு
என் செல்லம் ...
உறவுகள்
மீண்டும் நான் மகளாகி
பெற்ற பெற்றோர் ...
குடும்ப அட்டையில்
பெயர் நீக்கி பெயர் பதித்த
புது சொந்தங்களின் பரிமாற்றம் ...
ஊடல்
நான் நாடும் விழைவு...அவர்
என் பெயர் சொல்லி அழைக்கும் நாள் !
இல்லையேல் எப்போதும் போல்
தங்கம் செல்லம் என்னடா மட்டுமே ...
விடுமுறை நாட்களில்
அவர் கை சுட்டுக்கொண்டு
சமைக்கும் சமையலில்
காரம் உப்பு குன்றும் ஆனால்
காதல் குன்றாமல் பரிமாறிய நாட்கள் ...
முதுமை
நடுங்கும் நரம்புகளில்
காதலை நேசித்து
முதுமையை விரட்ட
முயற்சி செய்த நாட்கள் ...
வாழ்கை
வரிகளில் சொல்வதென்றால்
தேனிலே ஊறிய செந்தமிழின்
சுவை போல ...
இறப்பு
என்னவனின் தமிழுக்காக
நான் விட்டுச்செல்லும் பக்கங்கள்
படிக்க நானில்லை
என்ற கவலையின்றி செல்கிறன்
அவரை முழுதாய் படித்த நம்பிக்கையில் ...
அவளுக்கான தமிழ்
அவள் என்ற சொல்லில்
புதைந்துள்ளது நான் மட்டுமே
என் பின் தூங்கி முன் எழுபவள்
எனைவிட்டு நிரந்தரமாய்
உறங்கிவிட்டாள்
எப்பிறப்பிலும் ஈடாகாது
யாதொரு தன்மையிலும்
அவள் என்மேல் காட்டிய அன்பு...
அவளின்றி உடற்றும் காலத்தில்
முள் கொண்ட படுகையில்
உறக்கத்தை தேடுவது போல..
தொண்டைக்குழி அடைக்கிறது ...
அது உணர்ந்தால் மட்டுமே புரியும்...
Subscribe to:
Posts (Atom)