May 8, 2010

வாழிடம் தேடி


தூண்டியவன் துயில் கொள்கிறான்
தூண்டப்பட்டவன் துக்கம் செய்கிறான்

தடையின்றி பயணிக்கிறது ஆக்கபூர்வமான
மனிதவளம் அழிவுப்பாதையில் ...

உணர்வுகளின் விளையாட்டில்
உயிர் தோற்கிறது
உரிமைகள் மீறப்படுகின்றது ...

சிந்திய உதிரமும் சிறுநொடியில்
மண்ணில் கலந்து தின்மமாகின்றது
வன்முறையின் நிறமும் சிகப்பு ...

இயன்றவன் இறையாண்மை பேசுகிறான்
இயலாதவன் அரசியல் பேசுகிறான்
பாவப்பட்ட மனிதமோ பல்லக்கில்
பயணிக்கிறது பாதாளத்தில் விழ ...

வடக்கும் தெற்கும்
கிழக்கும் மேற்கும்
திசையின்றி பயணிக்கிறது
வன்முறையற்ற வாழிடம் தேடி !

பெண்வாசம்


காற்றில் அசைந்தாடும்
கொடியும் மௌனம் மீட்டுகிறது
உன் துப்பட்டா
அதன் மேல் விழுந்ததால் ...
பெண்வாசம் சுவாசிக்க ...

நீ பிரசவத்திற்காக
உன் அம்மா வீட்டில் ...
உன்னுடன் நான் தினமும்
குளிக்கிறேன் !
குளியலறை சுவற்றில் நீ ஒட்டிய
உன் நெற்றிப் பொட்டுடன் ...

நித்திரையற்ற கனவுகளும்
நிஜமற்ற நினைவுகளும்
பொய் கூறா கவிதைகளும்
ஊடல்லற்ற காதலும்
இனிப்பற்ற சர்க்கரையும் போல்
நீயற்ற நம் வீடு ....