Dec 13, 2010

நிறைவின்றி ...

 
 
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
துளிரும் மழைத்துளி போல் - உன் 
ஊடலில் உயிராய் தெரிகின்றது 
நம்  காதல்

உன் செல்ல வசைகளிலும்
உடையாத மௌனங்களிலும்
உணராத உயிர்... உறைகின்றது !

நின்  இதழ் கண்டு  சிவக்கும்
கீழ்வாண அந்தி பொழுதில்
வெய்யோன் வெட்கத்தில்
மறைகின்றான்  (மன)நிறைவின்றி ...

Aug 25, 2010

எதிர்காலம் என்னுள் ...


ஐந்திலக்க ஊதியம்
ஆணை பிறப்பிக்கும் தொழில்
அன்பு மனையாள் அழகு மழலை
மகிழ்வுடன் வீட்டுமனை
பயமற்ற எதிர்காலம் என்னுள் ...

உன் பெயரிட்ட என் பெண்ணை
அழைக்கும் போதெல்லாம்
விழிகளில் ஒளிந்துகொள்ளும்
கண்ணீருக்கு மட்டுமே புரியும்
பொய் வாழ்கையும் மெய் வாழ்வும் ...

Jun 27, 2010

காதலாகி போன நினைவுகள்


எங்கு காணினும்
காதலாகி போன
நினைவுகள்

கொடுப்பதும்
பறிப்பதும்
நீ என்றால்
நான் எதற்கு ?

நான் சிந்திக்காமல்
மொழிந்த வார்த்தைகள்
சந்திக்காமல் செல்கின்றது
உன் மௌனங்களுடன்

எப்போதும் தள்ளி நின்றே
ரசிகப் பழகியவனுக்கு
அருகாமை ஆபத்துதான் ...

கண்களால் கதைக்காதே
ஒரு முறையேனும்
விழிகளால் பார்
உதடுகளால் பேசு
இதயத்தில் இரக்கம் காட்டு ...

Jun 24, 2010

மணல் வாசனை


ஆற்றங்கரை மணலில்
கை கோர்த்து நடந்துவந்த
பாதசுவடுகள்
எங்கோ மறைந்து விட்டன
அச்சுவடுகள் ஏதேனும்
ஒரு கட்டிடத்தில் ஏக்கத்தொடு
பெருமூச்சு விட்டுகொண்டிருக்கும்
தாய் மண்ணும் நம்மோடு
எப்போது சேரும் என்று !

எதிரே
ஓர் மணல் லாரி
பல பெருமூசுகளை
ஒரே மூச்சுடன்
சாய்க்கின்றது ....

Jun 13, 2010

அதில் நானும் ஒருவனாய்...


சாலையோர
ஓவியனை சுற்றி
பெருங்கூட்டம் ...

அந்த 'ஈ' க்கு மட்டும்
யாருக்கும் இல்லாத அக்கறை
அவன் முகத்தில் அமர்ந்து
ஓலமிட்டு அழுகின்றது ...

மனிதனிடம்
அபிமானம் மட்டுமின்றி
மனிதாபிமானம் பாருங்கள்
என்ற ஓவியத்தின் அர்த்தம்
அதற்கு மட்டும் புரிந்ததோ ?

நொடிகள் கரைய
நெடி பரவ
கலைந்தது கூட்டம்
அதில்
நானும் ஒருவனாய்...

கடந்தபின் மனம்
நெருடுகின்றது ...
இயலாமை எப்போதும்
இல்லாமையால்....

Jun 8, 2010

வெட்கத்தில் கொட்டிக்கிடக்கின்றது...


நீ விட்டுச்சென்ற வெட்கத்தில்
கொட்டிக்கிடக்கின்றது மிச்சம் ...
உன் வெட்கத்திற்கும்
நம் மௌனத்திற்கும்
குழந்தையாய் பிறக்கின்றது
உன் இதழோரம் சிறு புன்னகை ...

May 29, 2010

அலைகளுடன் !


இணைவது தெரியாமல்
நதியும் பயணிக்கிறது
கடலும் காத்திருக்கின்றது ...

அலைகளுடன் !

May 8, 2010

வாழிடம் தேடி


தூண்டியவன் துயில் கொள்கிறான்
தூண்டப்பட்டவன் துக்கம் செய்கிறான்

தடையின்றி பயணிக்கிறது ஆக்கபூர்வமான
மனிதவளம் அழிவுப்பாதையில் ...

உணர்வுகளின் விளையாட்டில்
உயிர் தோற்கிறது
உரிமைகள் மீறப்படுகின்றது ...

சிந்திய உதிரமும் சிறுநொடியில்
மண்ணில் கலந்து தின்மமாகின்றது
வன்முறையின் நிறமும் சிகப்பு ...

இயன்றவன் இறையாண்மை பேசுகிறான்
இயலாதவன் அரசியல் பேசுகிறான்
பாவப்பட்ட மனிதமோ பல்லக்கில்
பயணிக்கிறது பாதாளத்தில் விழ ...

வடக்கும் தெற்கும்
கிழக்கும் மேற்கும்
திசையின்றி பயணிக்கிறது
வன்முறையற்ற வாழிடம் தேடி !

பெண்வாசம்


காற்றில் அசைந்தாடும்
கொடியும் மௌனம் மீட்டுகிறது
உன் துப்பட்டா
அதன் மேல் விழுந்ததால் ...
பெண்வாசம் சுவாசிக்க ...

நீ பிரசவத்திற்காக
உன் அம்மா வீட்டில் ...
உன்னுடன் நான் தினமும்
குளிக்கிறேன் !
குளியலறை சுவற்றில் நீ ஒட்டிய
உன் நெற்றிப் பொட்டுடன் ...

நித்திரையற்ற கனவுகளும்
நிஜமற்ற நினைவுகளும்
பொய் கூறா கவிதைகளும்
ஊடல்லற்ற காதலும்
இனிப்பற்ற சர்க்கரையும் போல்
நீயற்ற நம் வீடு ....

May 4, 2010

வந்தார்கள் பார்த்தார்கள் சென்றார்கள் ...வசைகளுடன் கூடிய
அரைநாள் விடுப்பு
அடகு கடையில் மீட்டுவந்த நகை
பச்சைப்பட்டு...பருக்கள் மறைக்க
சிறிதாய் முகப்பூச்சு ...

தினசரி நாள்காட்டியில் அவள்
ராசிக்கு நேரே முயற்சி !

சம்பரதாய சடங்குகளுக்காக
கையில் தேனீர் கோப்பை
வாழைக்காய் பலகாரம்
செயற்கை வெட்கம்
சங்கடத்துடன் அவள் ...

வந்தார்கள் பார்த்தார்கள்
சென்றார்கள் ...

மௌனம் உடுத்திய சூழல்
மெதுவாய் உடைகிறது
அவளின் பொய் புன்னகையில்
இவையனைத்தும்
கடிதத்தில் தெரிவிக்கின்றோம்
என்ற பதிலுக்காக ...

Apr 28, 2010

அவளும் மழையும் ...கண்களுக்குள் மின்னலாய்
உட்சென்றவள் இதயத்தில்
இடியாய் இறங்கிவிட்டாள்

காதல் மழை பொழியும்
தருவாயில் காற்றினில்
கலைந்த மேகம் போல்

நிஜங்களை கரைத்துவிட்டு
நினைவுகளை அசைபோட
கற்றுக் கொடுத்தவளுக்கு
தெரிய வாய்ப்பில்லை ...

வானம் பார்த்த பூமியின்
ஏக்கமும் ஏமாற்றமும்
அவளிடம் சினம் பூண்டு
மேலும் ரணம் கொள்ளவில்லை ...

அவளை வெறுக்கவுமில்லை...ஆனால்
விரும்புவதை தவிர்க்கிறேன்
என்னிடம் அவள் அதனையே
விரும்புவதால்...

Apr 26, 2010

ஆனாலும் ரசிக்கிறேன்என்னவென்று தெரியவில்லை
ஏனென்றும் புரியவில்லை
எனை அறியாமல் சிரிக்கின்றேன்

சோப்புக்கட்டி கரைய குளிக்கிறேன்
சுடிதாரை பலமுறை மாற்றுகிறேன்
நெற்றிப்பொட்டை சிரிதாக்குகிறேன்
நொடிக்கொருமுறை முகம் பார்கிறேன்

வெட்கத்தால் சிவந்தது நான் மட்டும் அல்ல
என் வீட்டு கண்ணாடியும் தான்...இன்று
என் காதலனாய் உன்னை சந்திப்பதால்.....

இது காதலின் மொழியா அன்றில்
வெட்கத்தின் இலக்கணமா புரியவில்லை
ஆனாலும் ரசிக்கிறேன் எனை மறந்து
என் முகத்தில் பருக்கள் ...

Apr 13, 2010

நாமாய் பேசிய நாட்களை ...உன் சில கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை
இபோதெல்லாம் கேள்விகளே
வாழ்கையாய் போனதால்

என் நோக்கம் உனை
காயப்படுத்துவது அல்ல
என் காயத்தில் புதைந்த
உனை வெறுக்கவும் முடியவில்லை
உனை விரும்ப நீயும் அனுமதிப்பதில்லை
இப்போதும் காதலிக்கிறேன் நீயும்
நானும் நாமாய் பேசிய நாட்களை ..

உனை பிரிந்து விடு என்று சொல்
எனை மறந்து விடு என்று சொல்லாதே ...
உனை விடுத்தது வேறொரு பெண்
நிச்சியமாக இல்லை என் வரலாற்றில் ...

உனை பிரிகிறேன்
பிறகெப்போதவது நீ
எனை சந்தித்தால்
சின்னதாய் ஒரு பொய் மட்டும் சொல்லடி
நான்  நலம் என்று...
காத்திருக்கிறேன் நாம் சந்திக்கபோகும்
அந்த நிமிடங்களை எண்ணி ...

Apr 8, 2010

தீக்குச்சி சொல்லும் கவிதை
கரும்பலகை பாடம் கற்றலின்றி
கருப்பு மருந்து புனைகிறார்கள்
பற்ற வைத்த நானும்
பற்றில்லாமல் தான் எரிகிறேன்
பாலகர்களின் உழைப்பினை எண்ணி

பாராட்டு விழா


"கல்வி கட்டாயமாக்கிய
நடுவண் அரசுக்கு
பாராட்டு விழா"

வண்ண சுவரட்டிகளை
நூறாய் பிரித்து
கட்டுகிறார்கள்

அகவை ஏழினை தொட்ட
சிறுவனும் சிறுமியும்
அச்சகத்தில் ...

Apr 5, 2010

இயந்திர உறவுகள்9.30 - 5.00 p.m

வங்கியில் தாத்தா
பள்ளியில் பாட்டி
கல்லூரியில் அம்மா
ஐ.டியில் அப்பா
காப்பகத்தில் நான் ...

5.00 - 6.30 p.m

வரும் வழியில் எனை
அழைத்துக்கொண்டு
பாட்டி பின் தாத்தா
தொடர்ந்து அம்மா
இறுதியாய் அப்பா ...


6.30 - 8.30 p.m

அம்மாவும் அவள்
அம்மாவும் சமயலறையில்
தாத்தா தொலைக்காட்சியில்
அப்பா இணையதளத்தில்
பேசாத பொம்மைகளோடு
பேசிக்கொண்டு நான் ....


8.30 -

வழக்கம் போல்
மின்விசிறியின் சத்தமும்
விளக்குகள் உறங்க
இருண்ட அறையில் நானும் ...


விடுமுறை நாட்களில்
விடுகதை வாழ்க்கை
விடை தெரியும் முன்
அவர்கள் வேலைக்கான
விடியல் ...

வள்ளி முருகன் நெடுஞ்சாலை உணவகம்அவருக்கு பொடியன்
அந்தம்மாவிற்கு தம்பி
சக பணியாளனுக்கு டேய்
மதுரைக்கு எலே சின்னு
கோவைக்கு டேய் ராசு...

அவளுக்கு "முருகா"
அவள் உச்சரிப்பில்
என் அம்மாவின் நினைப்பு
நானூறு மைல்களுக்கு அப்பாலும் ...

வைகறை உறக்கம் யாமப்பணி
ஒவ்வொரு பேருந்தின் ஒலியிலும்
கண்களில் நித்திரை கரையும் ...

தட்டி தட்டி எழுப்புவோம்
பயணிகளின் தூக்கம் கலைக்க
கல்லா நிறைக்க ...
சினம் சாபம் திட்டுகள்
பொருட்படுத்தாது ...

இளையராஜா பாடல் !
செவி நோகும் அளவு
இரைச்சலில் ...

நின்ற பேருந்து புறப்படுகையில்
ஏதோ சொந்தம் சொல்லிக்காமல்
செல்வது போல் ...

இம்முறையேனும் காசு சேர்த்து
நெல்லை வண்டிக்கு செல்ல வேண்டும்
ஓடி வந்த நான் அம்மாவை பார்க்க ...

Mar 30, 2010

உனைச்சுற்றியே உலவுவதால்இதயத்தினுள் செல்லும்
இரத்தநாளங்களில்
குருதி பாய மறுக்கிறது

உள் சென்ற
ஹீமோகுளோபின்கள்
உனைச்சுற்றியே உலவுவதால்

நிமிடங்களாய் காத்திருகின்றது
ஏக்கத்தில் ஏனையவை ....
நமக்கும் நல்வாய்ப்பு
நல்குமென்று !

முன் தின மறுநாள்
முன் தின மறுநாள்
யாமம் களவுகொடுத்த வைகறையில்
செந்நிறப்பட்டு உடுத்தி
செஞ்சாந்து பொட்டிட்டு
மஞ்சள் பூசிய முகமும்
இதழ் மலரும் புன்னகையுடன்
நீ வருகிறாய்
குளிர்பொருட்டின்று நிற்கிறேன்
உன் தரிசனம் காண

நீயோ சிம்மபல்லக்கில்
வாணவேடிக்கையும்
மேளதாளம் முழங்க
கம்பீரமாய் பவனி வருகிறாய் ...
உன் பக்தர்களுக்கு அருள்புரிய
திருவிழா தித்திக்கும் விழாவானது

Mar 29, 2010

அவள் பெயர் எழிலரசி ...


நீ வருவதாய் சொன்னார்கள்
மரத்தடி சிகையலங்காரம்
கருவேலம் மாற்றாக பற்பசை
உன் நினைவுகளில் குளியல்
பழைய தீவாவளி துணி
இரவல் கைகடிகாரம்
அம்மன் திருநீறு
துடைத்த மிதிவண்டி
புது சந்தை செருப்புடன்
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருக்கிறேன் உனக்காக !

நீ பயணிக்கையில்
விரைவு பேருந்து கூட
மெதுவாய் ஊரும்
மிதவை பேருந்து போல...
ஊர்ந்து வந்து நின்றது
படிகளில் பவளச்சிலையாக
இறங்குகிறாய் நீ ... !

உனைத்தவிர அனைத்தும்
மறைந்துவிட்டது எனக்கு உன்
அலைபேசியில் வசீகரா பாடல்
சிணுங்க இதழோடு இருக்கமாய்
கொஞ்சி கொஞ்சி பேசுகிறாய் நீ ...
உனை பிறந்த கன்றுகுட்டி போல்
ரசிக்கின்றேன் நான்...

நீ அலைபேசியில் பேசிக்கொண்டே
"hey take this luggage... oh sorry ..."
என்று ஏதேதோ எழிலாய் பேசினாய்
பின் இதெல்லாம் எடுத்துக்கோ ...
இதில் இங்கடாச்செல்லம் வேறு

நகரத்தின் நாகரீகம்
உன் நகத்தில் தெரிந்தது
மருதாணி அன்றி நகப்பூச்சு ...
எழிலரசி வெறும் எழிலாய்...
நமை கடக்கிறது
பொதி சுமக்கும் கழுதை

காதலுக்கு
இந்த மாட்டுக்காரன் மட்டும்
விதிவிலக்கா என்ன ?
அனைத்தும் உண்டு
அவள் காதலுக்கு
பருவகாலத்திலேயே
மாற்றம் வர அவள்
பருவத்தில் வராதா?

என் வயதொத்த
ஆசிரிய நண்பரிடம்
என் நிலை பகிர ..
வாரம் ஒன்று கழித்து
வாசித்து காட்டினார்
வாரமலரில் கவிதையாக ...

Mar 28, 2010

ஞாயிறு மதியம்ஞாயிறு மதியம்
குட்டித்தூக்கம் கண்களின்
மேல் தீராக் காதல்
சன்னலோரமாய் படுகையில்
தூக்கத்தின் காதலையாவது
நிறைவேற்ற ...

தீடீர்ரென்ற மின்வெட்டு
காற்றினை அனுமதிக்க
கதவினை திறக்கின்றேன்
எதிர் திண்ணையில் நீ

உன் கையில் சுஜாதாவின் நாவல்
உன் முகம் மறைத்து... புத்துணர்வின்
அர்த்தம் என்னுள் விளங்கியது

பழைய தினத்தந்தி என் கையில்
உன் எதிர் திண்ணையில் நான்
சாய்வு நாற்காலியில் தாத்தா
போய் வெற்றிலை வாங்கிவா என்று
இன்னும் நீ நாவலுக்குள் ...

உள்சென்று உடைகளுக்குள் புகுந்து
வெளியேவரும் வேளையில் உன் அம்மா
தெருமுனையில் கருவேப்பிலை
வங்கி வரச்சொல்லி... மாற்றமின்றி
நாவலுக்குள் உன் முகம்....

அம்மாவின் கட்டளை நிறைவேற்ற
உள்சென்று நாணயம் எடுக்க நீ ...
நாவல் மட்டும் திண்ணையை
முத்தமிட்டுக் கொண்டு ...

கள்ளத்தனமாய் நாவல் எடுக்கின்றேன்
நடுபக்கத்தில் நான் எழுதிய கடிதமும்
என் கடவுச்சீட்டு புகைப்படமும் ...

எறும்பின் ஏக்கம் ...சுழல் நீரில் சிக்குண்ட
இலை மேல் நான்
முடிவுகள்.. சில நொடிகள்
தள்ளிப் பயணிக்கிறேன்

அச்சில நொடிகளில்
வாழ்வினை ரசிக்கும்
வரம் தந்த இறைவனை
மறவாமல்...

ஒருபுறம் விண்ணை
முட்டும் அல்லியும் தங்க
கதிரவனின் காதலியும்
என் கண்முன் ...

மறுபுறம் முரட்டு
வாய் பிளக்கும்
கெண்டை கெளுத்தியும்
சர்பம கொண்ட விஷமும் ...

எதை ரசிக்க எனை மறக்க
என்ற ஒரு சூழலில் சுழலின்று
விடுபட்டு மெல்லிய ஓடையில்
மிதமாய் பயணிக்கிறது
இலை மட்டும் ...

எச்சூழலிலும் வாழ்வினை
ரசித்திட வேண்டும் என்ற
எண்ணம் மட்டுமே...நான்
நீரில் முழ்கியவாறே ...

Mar 19, 2010

ச ரி க ம ப த நீ...அன்ன
எனை அழவைப்பதும் பின்
அரவணைப்பதும்

எனை விரும்புவதும் உனை
வெறுக்கவைப்பதும்

எனை கொஞ்சுவதும் பின்
கெஞ்சவைப்பதும்

எனை விலகுவதும் பின்
நெருங்கவைப்பதும்

எனை கோபப்படுத்துவதும் பின்
பொய் ஊடல் கொள்ளவைப்பதும்

எனை திமிர் நாடச்செய்தும் பின்
நாணப்பட வைப்பதும்

எனை காதலித்தும் பின்
காதல்பட வைத்ததும்

எனை எனக்கே பிடிக்கச்செய்தும்
பிறர் எனை மதிக்கச்செயததும்

நீ ..

ஓர் எழுத்தில் எழுதப்படாத
இரு வார்த்தைகள்...

பொய் சொல்லும் திருட்டே
மெய் சொல்லும் தமிழே
உயிர் கொண்ட உறவே
உயிர் கொண்ட அன்பே

காதலின் தவறே காதலின் பிரிவே
காதலின் தவிப்பே காதலின் தவமே
இவை யாவுமே நீ சொன்னால்
நான் உனை என்ன சொல்வேன்

உன் வார்த்தையில் நான் எனை தொலைத்தேன்
உன் அன்பிலே நான் மறந்தேன் என் தமிழே
உன் பாதையில் நான் தொலைத்தேன்
என் சுவடுகளை ...

உன் ஓர் பார்வையிலே சிக்கிதவிக்குதடி
என் வாழ்வின் ஓராயிரம் மணித்துளிகள் ...

தினந்தோறும்


தினந்தோறும்
வானவில் காண்கிறேன்
வைகறையிலும்
அந்திப்பொழுதிலும்
வெய்யோன்
உன் மேல்
விழும்போதெல்லாம் ...

வண்ணத்துபூச்சிகள்
வரலாறு கனாத
உண்ணாவிரதமாம் ...
மகரந்தத்தில் தேன்
இல்லையென்று
மலரென நினைத்து
உன்மேல்
தேன் உறிஞ்சியதால் ...

Mar 18, 2010

காதல் செய்து கிடப்பதேபேருந்து நிறுத்தம்
கல்லூரி வாசல்
உன் தெருவோர டீகடை
காவல்நிலையம் நீதிமன்றம்
அதிகாரவர்கத்தால்... இன்று
மனநலமருத்துவமனை
ஒருதலைபட்சமான முடிவு....

இப்போதும் காதலிக்கிறேன்
முன்னெப்போதும் இல்லாத
நிம்மதியுடன்....

உனை அல்ல நம் காதலை ...
என் கடன் காதல் செய்து கிடப்பதே ...

Mar 17, 2010

வாடகை தாய்


வறுமையால் ...
சுமக்கின்றேன்
உன் பாலகனை
என் பனிக்குடத்தில் ...

வரலாறு ...
நீ வாழ்ந்த
காலங்களில்
நான் ...

இப்படிக்கு வெட்கம்உன்னுடன் மழையில்
கை கோர்த்து நான் ...
காதல் குடையிருந்தும்
மழையில் நனைகிறது
உனக்கு முன் உன் வெட்கம் !

உனக்கான கடிதங்களை
சந்திப் பிழைகளுடனே எழுதுகிறேன்..
மாத இறுதியில் உன்னுடன்... நாம்
கடிதங்களை வாசிக்கும்போது
நீ பிழைகள் கண்டு இதழ் மடித்து
என் தலையில் செல்லமாய்
குட்டுவதற்காக...

Mar 14, 2010

உன் பாதங்களில் என் பயணம் ...


மரங்களடர்ந்த சாலையோரம்
ஓர் அந்தி மாலைநேரம்
என்றும்போல் காத்திருக்கிறேன்

பலமுறை ஒத்திகையில்
இம்முறை துளிர் நம்பிக்கை
அமைதி சூழலை ஆரவாரமின்றி
உடைக்கையில்

மனதில் இனம்புரியா பயம்
நீ ஏற்பதும் இகழ்ப்பதும் ?
இருபினும் என்முயற்சி ....

தென்றலுக்கும் நடை
கற்றுக் கொடுத்தவளாய்
நீ கடந்து செல்கின்றாய் ...

உன் காலணிகளை பார்கிறேன்
மீண்டும் பயம் தொற்றிக்கொள்கிறது
கேட்டுவிட்டேன் நான்

"அம்மா உங்க செருப்ப
தைக்காமலே போறிங்களே "


திரும்பியவள் ...


"மீதியை நீங்களே வச்சுகோங்க
என்று வார்த்தைகளை முடித்தாள்"...

சில நொடிகளில்
மீதியும் சேர்த்து
தேனீர் கடையில் ...

Mar 13, 2010

காலங்களில் கா(த்)தல்...... /.. /2000

நீ இம் மென்று
ஒருவார்த்தை சொல்லடி
கானல்நீரை கூட கவர்ந்துவருகிறேன்
பிற மாநிலத்தில் இருந்து


.. /.. /2004

காதலனாய்
தோற்றுப்போன என்னை
நண்பனாய் சிறைபிடித்து
சென்றுவிட்டாய் ....


.. /.. /2024

பதின்மபருவக் காதல்
முப்பட்டகத்தின் நிறப்பிரிகை..
முதுமைக் காதல்
அந்தி வானின் வானவில்...


.. /.. /.....

உன் நியாபகம் வரும்போதெல்லாம்
உனை மறக்கச் சொன்ன.... நீ
எப்போதும் என் நினைவில் ....

Mar 11, 2010

பார்வைகள் சில வினாடிகளில் ...பேருந்துநிறுத்த தூணில் நான்
ஊர்தி வரும் வழி பார்த்து அவள்
வீசிய காற்றில் அசைந்த கூந்தலை
சரிசெயதவாறே திரும்புகிறாள்...
என் கண்கள் அவளினை நோக்கி...
வினாடிகளில் முகம் சுளிதவள்
என் தேடல் கண்டு... சூழ்நிலை
விளக்கி வருத்தம் கோருகிறாள்
நான் தவறவிட்ட கம்பினை
கையில் கொடுத்தவாறே !

Mar 10, 2010

மனைவியின் டைரிக் குறிப்புகள்


திருமணம்

இன்றுமுதல்
என் முகவரி
மாற்றம் ...

முதலிரவு

ஆடை களைந்து
மெய் வருத்தி
அவர் மார்பில்
துயில் கொண்ட இரவு ...

பேறுகாலம்

பனிக்குடத்தில் சுமக்கும்
சுகமான தொப்புள்கொடி உறவு
புளிப்பை விரும்பி இனிப்பை தவிர்த்த
ஈரைந்து மாதங்கள் ...

பிரசவம்

எந்தலைவனின் முகச்சாயலில்
நான் பெற்ற மற்றுமோர் மகவு
என் செல்லம் ...

உறவுகள்

மீண்டும் நான் மகளாகி
பெற்ற பெற்றோர் ...
குடும்ப அட்டையில்
பெயர் நீக்கி பெயர் பதித்த
புது சொந்தங்களின் பரிமாற்றம் ...

ஊடல்

நான் நாடும் விழைவு...அவர்
என் பெயர் சொல்லி அழைக்கும் நாள் !
இல்லையேல் எப்போதும் போல்
தங்கம் செல்லம் என்னடா மட்டுமே ...

விடுமுறை நாட்களில்
அவர் கை சுட்டுக்கொண்டு
சமைக்கும் சமையலில்
காரம் உப்பு குன்றும் ஆனால்
காதல் குன்றாமல் பரிமாறிய நாட்கள் ...

முதுமை

நடுங்கும் நரம்புகளில்
காதலை நேசித்து
முதுமையை விரட்ட
முயற்சி செய்த நாட்கள் ...

வாழ்கை

வரிகளில் சொல்வதென்றால்
தேனிலே ஊறிய செந்தமிழின்
சுவை போல ...

இறப்பு

என்னவனின் தமிழுக்காக
நான் விட்டுச்செல்லும் பக்கங்கள்
படிக்க நானில்லை
என்ற கவலையின்றி செல்கிறன்
அவரை முழுதாய் படித்த நம்பிக்கையில் ...

அவளுக்கான தமிழ்

அவள் என்ற சொல்லில்
புதைந்துள்ளது நான் மட்டுமே
என் பின் தூங்கி முன் எழுபவள்
எனைவிட்டு நிரந்தரமாய்
உறங்கிவிட்டாள்

எப்பிறப்பிலும் ஈடாகாது
யாதொரு தன்மையிலும்
அவள் என்மேல் காட்டிய அன்பு...

அவளின்றி உடற்றும் காலத்தில்
முள் கொண்ட படுகையில்
உறக்கத்தை தேடுவது போல..
தொண்டைக்குழி அடைக்கிறது ...

அது உணர்ந்தால் மட்டுமே புரியும்...

Mar 9, 2010

சற்றே இளைப்பாறுகிறது காதல்உருவகம் உடுத்திய
உவமையாய் பாடல்களிலும்
உணர்வுகள் மோதும்
ஊடலாய் ஊடகத்திலும்
கவிஞன் மெருகேற்றும்
கருவாய் கவிதைகளிலும்
உலா வந்த காதல்...
நம்மிடம் சற்றே இளைப்பாறுகிறது
நீ வெட்கம் உடுத்தி அமர்ந்திருந்ததால்...

Mar 8, 2010

இரண்டெழுத்து கவிதையாக
மொட்டுகளாய் துளிர்த்து
சிறுமியாய் மலர்ந்து
பூவாய் பூப்பெய்து
மனைவியாய் சூல்முடி தரித்து
மீண்டும் மழலையை விதையாய்
விதைக்கிறாள்... தாய்மையால்
விளங்கப்பெறும் பெண்மை ...

அன்னையாய் அன்பையும்
சகோதரியாய் பாசத்தையும்
தோழியாய் நட்பையும்
மனைவியாய் இல்லறத்தையும்
காதலியாய் காதலையும்
பெண்ணாய் நம்பிக்கையும்
தருபவள்...அவள் என்னுள்
யாதுமாகி நிற்பவள்.... பெண்னென்ற
இரண்டெழுத்து கவிதையாக ...

Mar 7, 2010

என்னுள் காதலாகிவிட்டன
நான் படிக்காமலே எனக்கான
பாடங்கள் படிக்கப்பட்டன ...

நான் உறங்காது என்
கனவுகள் கடந்துவிட்டன ...

நான் மொழியாமலே எனக்கான
மௌனங்கள் தீர்ந்துவிட்டன ...

நான் காணாது எனக்கான
காட்சிகள் மறைந்துவிட்டன ...

நான் உணர்த்தாமலே அவள்
பெண்மை என்னுள் காதலாகிவிட்டன !

Mar 4, 2010

அவ்வீதி
உன் கைபிடித்து நடந்து வந்த வீதி
இன்று வெறுமையாய் காட்சியளிக்கிறது
உன்னுடன் நான் விரும்பிய தனிமை
இப்பொது வீதிக்கு கிடைதிருகின்றது
ஒவ்வோர் முறையும் அதில் நடக்கையில்
அது உன் நியாபகங்களையே
நியாபகப்படுத்தும் ...

பிறப்பு முதல் இறப்பு வரை
வரம் முதல் சாபம் வரை
அனைத்தையும் கண்ட அவ்வீதி
இன்று விதியின் பிடியில்

தீண்டாமைத் தொற்றுநோயால்
மனிதத்தின் வக்கிரமும் சமூகத்தின்
சலனமற்ற மூடநம்பிக்கைகளும்
அரசியல் சாயம் பூசிக்கொண்டு
யாருமற்ற தனிமையில் அவ்வீதி...

பாரத்துடன் வண்டி
இழுத்துச்செல்லும் முதியவர்
சீருடையில் பள்ளி குழந்தைகள்
மணலில் விளையாடும் மழலையை
கண்டிக்கும் தாய்
வீதியை பார்த்தவாறு திண்ணையில்
வெற்றிலை கொட்டும் மூதாட்டி ....

இப்போது யாருமில்லை
வீதி மட்டும் வீணாய் இருக்கிறது
முன்பிருந்த அழகினை
விட்டுக்கொடுதுவிட்டு...

Mar 1, 2010

குற்றத்தால் விளைந்த சுற்றம்..இப்பூவுலகில் யாவரும்
குற்றம் செய்தவர்களே
நாம் உயிர்பெற
பிற உயிரணுக்களை
கொல்லும்போது...

Feb 26, 2010

நீராவிசூரியக் காதலனால்
நீர் காதலி
காற்றுக்கணவனுடன்
கலந்துவிட்டாள்
நீராவியாய் ...

அம்மா அன்றும் இன்றும்


அன்று
போரேன்மா என்றபோது
"போயிட்டுவரேன்னு சொல்லுப்பா"
என்றவளிடம்

இன்று
போயட்டுவரேன்பா என்றவளிடம்
ஒற்றை வார்த்தை "போ" என்ற பதிலாய்

Feb 15, 2010

விவாக(ம்)ரத்துபெண்களுக்கென்று தனிவரிசை இல்லை
தயவுசெய்து வரிசையில் வரவும்
- நீதிமன்ற உத்தரவின்படி

பெற்றவர்களின் வாதங்களை
எதிர்த்து இனைந்தவர்கள்
வழக்குரைனர்களின் வாதங்களை
ஏற்று பிரிகின்றார்கள் ....

Feb 9, 2010

ஓர் அகதியின் தேசியகீதம்கூழானாலும் குளிதுக்க்குடி
கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டு... என்று
பள்ளி பாடம் எழுதியவள்

கிழிந்த கந்தல் ஆடையுடன்
தண்ணீர் மட்டும் பருகிச் செல்கிறாள்
அகதிகள் முகாமில்...

ஒலிபெருக்கியில் தேசியகீதம்
பசிமயக்கத்தில் இதழ் பிரியாது
மெல்ல முனுமுனுக்கும் அப்பிஞ்சின்
நிலை கண்ட அவள் தோழி ...

சப்தமாக பாடு அப்போதுதான்
இறைவன் நம்மை இங்காவது
நிலைக்க செய்வான் என்றாள்

பிஞ்சுகளுக்கே உள்ள மொழியில்...

மதிய உணவு இடைவேளை
மணி ஒலித்தது
அச்சிறுமியின் முகம் மலர...

Feb 3, 2010

அசல்


தொலைக்காட்சியில்
பூ புனித நன்னீராட்டு விழா.
ஏக்கத்துடன் திருநங்கை..

நடைபாதை கடையில்
கால் இழந்தவரின் கையில்
ஓர் புத்தகம்
சொந்த கால்களில் நிற்பது எப்படி ?

கடற்கரை மணலில்
காதல் மனைவிக்கு
அழகிய மணல் வீடு கட்டினான்
ஏழை கட்டிட தொழிலாளி ...

நல்வரன் வேண்டி
கோவிலில் தட்சணை கொடுத்தவள்
தாய் வீட்டில் அன்பான கணவன்
நாடகம் பார்க்கிறாள்
வரதட்சனை கொடுக்க
வசதியின்றி...
.
.
.
முற்றுப் பெறாத முடிவுகள் ...

Jan 9, 2010

முத்தங்களுடன் கூடிய காதலும் ...
ஓட்டபடாத அஞ்சல்தலைகும்
ஒட்டிய கடிதத்திற்கும் காதல் ...
ஆண்டுகள் கடந்துவிட்டன
நீ அங்கே நானோ இங்கு
கடிததில் நமது வாழ்க்கை
நீ என் அருகில் இருதபோது
குளிரின் போர்வையாய் வெயிலின் நிழலாய் ...

இன்று நான் போர்களத்தில்
என் வாழ்வின் இறுதி நொடிகள்..
நான் திரும்பும் முன்
உனக்கும் நம் மழலைக்கும்
என் முத்தபதிவுகள்
நான் திரும்பாவிடில்
உன் கண்ணீர்துளிகள்
எங்களின் வெற்றிக்கு பரிசாக ....

முன்போல் இக்கடிதம் உன்னை அடையாது
எனினும் சில தருணங்களில் சில நம்பிக்கைகள்
எந்த வன்முறையாலும் அன்பினை வாங்கமுடியாது
இதே தருணத்தில் எதிர்படையிலும் இருப்பான்
என்னை போல் ஒருவன்
போரில்லாத உலகமே இக்கடிதத்தின் வெற்றி
உன்னை அடைந்தால் ...

எழுதிய பேனா மூடவில்லை
மேசையின் மீது ஒற்றை ஸ்டாம்பும்
ஒட்டப்பட்ட கடிதமும் திடீரென்ற சப்தம்
சாய்ந்த மெழுகுவர்த்தியில் எரிகிறது
கடிதம் மட்டுமல்ல
முத்தங்களுடன் கூடிய காதலும் ...