Apr 5, 2010

இயந்திர உறவுகள்



9.30 - 5.00 p.m

வங்கியில் தாத்தா
பள்ளியில் பாட்டி
கல்லூரியில் அம்மா
ஐ.டியில் அப்பா
காப்பகத்தில் நான் ...

5.00 - 6.30 p.m

வரும் வழியில் எனை
அழைத்துக்கொண்டு
பாட்டி பின் தாத்தா
தொடர்ந்து அம்மா
இறுதியாய் அப்பா ...


6.30 - 8.30 p.m

அம்மாவும் அவள்
அம்மாவும் சமயலறையில்
தாத்தா தொலைக்காட்சியில்
அப்பா இணையதளத்தில்
பேசாத பொம்மைகளோடு
பேசிக்கொண்டு நான் ....


8.30 -

வழக்கம் போல்
மின்விசிறியின் சத்தமும்
விளக்குகள் உறங்க
இருண்ட அறையில் நானும் ...


விடுமுறை நாட்களில்
விடுகதை வாழ்க்கை
விடை தெரியும் முன்
அவர்கள் வேலைக்கான
விடியல் ...

வள்ளி முருகன் நெடுஞ்சாலை உணவகம்



அவருக்கு பொடியன்
அந்தம்மாவிற்கு தம்பி
சக பணியாளனுக்கு டேய்
மதுரைக்கு எலே சின்னு
கோவைக்கு டேய் ராசு...

அவளுக்கு "முருகா"
அவள் உச்சரிப்பில்
என் அம்மாவின் நினைப்பு
நானூறு மைல்களுக்கு அப்பாலும் ...

வைகறை உறக்கம் யாமப்பணி
ஒவ்வொரு பேருந்தின் ஒலியிலும்
கண்களில் நித்திரை கரையும் ...

தட்டி தட்டி எழுப்புவோம்
பயணிகளின் தூக்கம் கலைக்க
கல்லா நிறைக்க ...
சினம் சாபம் திட்டுகள்
பொருட்படுத்தாது ...

இளையராஜா பாடல் !
செவி நோகும் அளவு
இரைச்சலில் ...

நின்ற பேருந்து புறப்படுகையில்
ஏதோ சொந்தம் சொல்லிக்காமல்
செல்வது போல் ...

இம்முறையேனும் காசு சேர்த்து
நெல்லை வண்டிக்கு செல்ல வேண்டும்
ஓடி வந்த நான் அம்மாவை பார்க்க ...