
நீ வருவதாய் சொன்னார்கள்
மரத்தடி சிகையலங்காரம்
கருவேலம் மாற்றாக பற்பசை
உன் நினைவுகளில் குளியல்
பழைய தீவாவளி துணி
இரவல் கைகடிகாரம்
அம்மன் திருநீறு
துடைத்த மிதிவண்டி
புது சந்தை செருப்புடன்
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருக்கிறேன் உனக்காக !
நீ பயணிக்கையில்
விரைவு பேருந்து கூட
மெதுவாய் ஊரும்
மிதவை பேருந்து போல...
ஊர்ந்து வந்து நின்றது
படிகளில் பவளச்சிலையாக
இறங்குகிறாய் நீ ... !
உனைத்தவிர அனைத்தும்
மறைந்துவிட்டது எனக்கு உன்
அலைபேசியில் வசீகரா பாடல்
சிணுங்க இதழோடு இருக்கமாய்
கொஞ்சி கொஞ்சி பேசுகிறாய் நீ ...
உனை பிறந்த கன்றுகுட்டி போல்
ரசிக்கின்றேன் நான்...
நீ அலைபேசியில் பேசிக்கொண்டே
"hey take this luggage... oh sorry ..."
என்று ஏதேதோ எழிலாய் பேசினாய்
பின் இதெல்லாம் எடுத்துக்கோ ...
இதில் இங்கடாச்செல்லம் வேறு
நகரத்தின் நாகரீகம்
உன் நகத்தில் தெரிந்தது
மருதாணி அன்றி நகப்பூச்சு ...
எழிலரசி வெறும் எழிலாய்...
நமை கடக்கிறது
பொதி சுமக்கும் கழுதை
காதலுக்கு
இந்த மாட்டுக்காரன் மட்டும்
விதிவிலக்கா என்ன ?
அனைத்தும் உண்டு
அவள் காதலுக்கு
பருவகாலத்திலேயே
மாற்றம் வர அவள்
பருவத்தில் வராதா?
என் வயதொத்த
ஆசிரிய நண்பரிடம்
என் நிலை பகிர ..
வாரம் ஒன்று கழித்து
வாசித்து காட்டினார்
வாரமலரில் கவிதையாக ...