Oct 28, 2013

நீயற்ற வெற்றிடம்

நீயற்ற 
வெற்றிடம் 
ஒருபோதும் 
முழுமையடைவதில்லை ...
உனைத்தவிர ...

Aug 14, 2013

அழகாய் தெரிந்தது....காதல்
பெருநகர சாலையின் 
கார்பன் தூசுக்கள் 
அலுவல்களின் 
விருப்பு வெறுப்புகள் 
கடந்து 

தனிமை குப்பைகளும் 
வெறுமை வெற்றிடமும் 
நிரம்பி வழியும் 
இல்லம் நுழைகையில் 

அலைபேசியில் 
குறுஞ்செய்தியாய் 

" தனிமைக்கும் 
நினைவுகளுக்கும் 
நான் இரையாகி 
நோகிறேன் ...
எப்போதென்னை  
அழைத்து போகிறாய் " என்று 

வார்த்தைகள் 
வலிக்கும் வரை 
யோசிக்கிறேன்
அகப்படவில்லை 
அவளுக்கு பதிலளிக்க 

பிரிவின் வலிதனில் 
நினைவின் காட்சிகள் 
நிமிடங்களை 
தின்றுகொண்டிருக்கையில் 

உனக்காக 
காத்திருந்து 
வாசல் நோக்கி 
வெளிநடப்பு 
செய்யும் எறும்புகள் ...

ஒரு குற்றுழி
இருப்பு கொள்ளாது 
பயணமானேன் 

அழகாய் தெரிந்தது....காதல்

Aug 13, 2013

களவாடி வாழ்ந்த நொடிகள் ...


நிரல்களாக வைக்கப்பட்ட 
ரோஜா பூக்களை 
இவள் கண்களால் 
சுட்டும் போது
அவை  காற்றிடம் 
ஈரத்தை களவாடி
தன்  இதழ்களை 
மெருகேற்றுகின்றன 

இவள் சூடப்போகும் 
மஞ்சள்  பூ தவிர்த்து 
மற்றனைத்தும் 
சோகம் கரைந்து 
மகிழ்வுடன் 
நினைவுகொள்கின்றன 

அவள் சூடிய பூவோடு 
வாழ்ந்த நொடிகளை ...

Aug 12, 2013

வாழ்விடம் எதுவாயினும் ...வாழ்விடம் 
எதுவாயினும் ...
மீன்களின் 
சுதந்திரமென்பது 
மீனவன் வலையில் 
சிக்காதவரை  
மட்டுமே ..

Aug 2, 2013

அச்சாகும் வண்ண மைநமது  உறவுகளை 
நாசிக் நகரில் 
அச்சாகும்
வண்ண மையும்
எண்களையும் கொண்ட
காகிதங்களே
தீர்மானிக்கின்றன ....

Jul 23, 2013

ஏதும் பரிமாறப்படவில்லையெனினும்தொலைக்காட்சியின் ஒளி  
கறுப்பு வர்ணம் உடுத்தியிருந்த 
யாமத்தை வென்று 
அறை முழுதும் மங்கலான 
வெளிச்சம் வியாபித்திருந்தது  

மாலை நேர ஊடலில்
நம்மை மௌனம் அடிமையாக்கிய சூழலில் 
என்மடி மீது தலை சாய்த்து விழிகளால்
மௌனத்தை கரைக்கிறாள் 

சொல்ல இயலா ஓர் உணர்வு  
அடைக்கும் தொண்டைகுழியையும்
உடைத்துவிட்டு 
கண்ணீராகவும் காதலாகவும் 
என் தேவதையின் கன்னத்தில் விழ !

அணிச்சையாய் பார்த்த பார்வை 
என் ஆயுள் வரை போதுமடி 
இனி  நம்முள் ஏதும்
பரிமாறப்படவில்லையெனினும் கூட...

Mar 4, 2013

இன்றைய பகலிடம் நேற்றைய இரவு ...விடைபெற்று சென்றவளிடம்
பறிகொடுத்த சூழல் எனை ஆள
சில பாதங்கள் எடுத்துவைத்து
திரும்பியவள்
ஓடி வந்து மார்பில்
முகம் புதைக்கிறாள்
வெட்கம் பிடுங்கி தின்கிறதென !


அவள் நெற்றிப்புள்ளியில்
தொடங்கும் வகிடில்
இதழ் பதித்து நின்றுவிட்டேன் ...


மெதுவாய் நீந்திக் கடக்கிறது
இன்றைய பகலிடம்
நேற்றைய இரவு ..
ஒவ்வொருமுறையும் ....

Feb 28, 2013

வாக்கு...

வாக்கு வங்கியின்
வரவு அதிகரிக்க
இரத்த வங்கியில்
இருப்பு குறைகின்றது...

Feb 27, 2013

அவள்... வாழும் தேவதை :-)


தனித்து நடக்கவே
விதிக்கப்பட்ட
வாழ்க்கைப் பாதையில்
சற்றும் எதிர்பாரா சூழலில்
என் பயணச்சுவடுகளோடு
இணை பாதம் பதித்த...

அவள்... 


பெண்மையின்
அனைத்து மை தொட்டு
அன்பென்ற தூரிகையால்
மழலை குறும்புடன்
தன்னை தானே
ஓவியமாய் வரைந்து
கொண்ட வாழும் தேவதை :-)

Feb 14, 2013

நீ...நானென்று


என்னுள் 
வியாபித்திருந்த 
உனது நினைவுகளால் ... ! 
பிறரால் அழைக்கப்பட்டேன் 
"நீயென்று" ... 
எனக்குள் உணர்ந்தேன்
 "நானென்று"

யாருமற்ற சாலை


கனத்த மனதுடன்
யாருமற்ற சாலையில்
நடக்கும் போது
என் பாதம் சுற்றிச்சுற்றி
எச்சில் செய்யும்
நாய் குட்டியிடம்
தோற்றுத்தான் போகிறது
என் கசப்பான
சூழ்நிலைகள் ....

Jan 11, 2013

மார்கழியின் கோலவாசல் ...
இல்லத்தில்
மனம் இருப்புகொள்ளாது
அம்மாவின்
சொல் எத்தனித்து
மார்கழியின்
கோலவாசல் கடக்கையில்

எனதெதிரெ
புருவம் உயர்த்தி
கண்கள் துழாவி
நீ உட்செல்லும்போது

உனக்காக
உயில் எழுதிய உயிரும்
மனமும் ஒப்பந்தபுள்ளி
கோருகின்றது
அழகிய பொய் வேண்டி
இல்லம் நுழைய ...

Jan 8, 2013

"MY Classmate - 2013 "முதல் நாள்
புதிய வகுப்பறை"2013"

அறிமுக நண்பர்களாக
சூழ்நிலைகள் ...

பழக்கப்பட்ட ஆசிரியராக
அனுபவங்கள் ...

மகிழ்ச்சி துயரம்
உவகை வெறுப்புகளாக
பாடவேளைகள் ...

மாற்றங்கள்
மாறாத
ஒன்றாக இருக்கையில்

குழந்தைகளாக
கற்றுக்கொள்ளுங்கள்...

சிறுவர்களாக
பழகுங்கள்...

இளமையுடன்
வாழுங்கள் :-)

முதியவர்களாக
யோசியுங்கள் ...

இந்த ஆண்டு
உங்கள் பாடங்களை படித்து
வெற்றிபெற
எனது வாழ்த்துக்கள் ...


ஆனால் நிசம் ... :)
கற்பனைக்கும்
கனவுக்கும்
கணிசமான
இடைவெளியில்
உன் காதல் ...

மௌனராகமாய் இசைக்கிறது ...முக்கிய முடிவுகளை
நேரிலே சொல்லிவிடு
அலைபேசி உரையாடலில்
அனைத்துமே
மௌனராகமாய் இசைக்கிறது
இசைஞானி இல்லாமலே...