Dec 30, 2011

நான் மனைவியின் காதலன் ...



காதல்... எப்போதும்
வெற்றிடமாகவே உணர்கிறது
நீயும் நானும் அருகருகே இருப்பதால்


பிரியும் தனிமையிலும்
தவிர்க்காத கனவுகளிலும்
வெற்றிடம்  நுரைகளாய்
நிரம்பி வழிய
காதல் மேலே ததும்புகிறது 

Oct 13, 2011

நிமிட நிலத்தில் பெய்த நினைவின் தூறலாய் ....


ஒரு மழை கால 
மாலை வேளையில் 
ஜன்னல் கதவுகள் 
படபடக்க வந்த 
சில்லென்ற காற்றில் 
நிமிடங்களை கரைக்க 
முயற்சிக்கையில் ...

அ ஆ ...
ஒன்றிரண்டு
சொல்லிக்கொடுத்த 
ஆசிரியர் 

கோலிகுண்டு 
சொல்லிக்கொடுத்த
நண்பனின் அண்ணன் 

வெள்ளை தாளில் 
இடதொரமாய் 
கோடுவரைய
கற்றுக்கொடுத்த 
அருகாமை அக்கா 

அவனுடன் 
விளையாடும் போது 
கோபம் கொள்ளும் 
நண்பன் 

அன்று 
நான் சொந்தம் 
கொண்டாடிய அவள் 

அவ்வப்போது 
வருகிறார்கள் !
நிமிட நிலத்தில் பெய்த 
நினைவின் தூறலாய் ...

Aug 1, 2011

அவள் போகும் பாதையில் ...

கண்களுக்கு இளைப்பாற
சிறு இடைவெளி கொடு
அதிகாலை முதல்
நிலவின் மடியில்
இரவு உறங்கும் வரை
உன் கண்கொள்ளா காட்சிகள்
என் விழிப்படலத்தில்
தேங்கி நிற்கின்றன !

அவை
காட்சிகளாய் விரிவதற்குள்
வானவில்லாய் நடப்பதும்
பூக்களென புன்னகைத்தும்
மழலை போல் மகிழ்வித்தும்
இம்சை செய்கிறாய் ...

என் கண்கள் என்னை
கடிந்து கொள்கின்றன
அவள் போகும் பாதையில்
நாம் நிற்க வேண்டாமென ...

பொதுஜனம் கண்ட வெட்கத்துடன்


பேருந்தின் இருக்கையில் 

கடற்கரை மணலில்
திரையரங்கின் இருளில்

மனம் மௌனமாகிய சூழலில்
காமம் எனும் மொழி கொண்டு
காதலை படிக்கும் விரசங்களில்

காதல் ..... சற்றே விலகி
விரசம் மட்டுமே அரங்கேறுகிறது
பொதுஜனம் கண்ட வெட்கத்துடன் ... 

என்னுடைமை என்று ....


நீ வாசலில்
புள்ளிதான் வைக்கிறாய்
ஆயிரம் கோலங்கள்
என் மனதில் ...

ஒத்திசைவாய் நீ அமர்ந்து
உன் நெற்றி பனித்துளிகளை
துடைக்கையில் தரையோடு மோதும்
பட்டு ஜரிகையில்
உன் கன்னத்தின் குழியும்
இதழோர மச்சமும்
மிச்சமின்றி பிரதிபலிக்கின்றன

உன் அழகையும்
என் மனநிறைவையும்

என்னுடைமை என்று ....

May 24, 2011

ம்ம்ம் மட்டும் ...





நான் மொழிகையில்
உன் பதிலாய்
ம்ம்ம் மட்டும் ...

பின் உணர்ந்தேன்
படுக்கையில்
உனது சேலை !

என் தனிமையோ
தினமும் தற்கொலை
செய்கின்றன ...

விடுமுறை முடித்து
நீ வரும் வரை ....

May 7, 2011

இதழோரம்

உன் இதழோரம்
ஒற்றை சோற்றுப் பருக்கை !
பிரிய மனமின்றி நியூட்டனை
நொந்து கொண்டு தரையில் ...
ஆவலாய் வந்த ஏறும்புகளோ
அணிவகுத்து செல்கின்றன

வண்டுகளுக்கு தூது சொல்ல ..

Jan 25, 2011

நிகழாதகவு

ஒரு முறையேனும்
திரும்பிப் பார்
உனக்காக தவமிருக்கும்

என் கனவுகளும்
கற்பனைகளும்

எனது மொழியும்
மௌனங்களும்

புன்னகையும்
சிறு சோகமும்

கேள்வியும்
பதில்களும்

மீண்டும் மீண்டும்
புதிதாய் பிறக்கின்றன
கருவுறாமலே ...

நான் அன்றே பெண்ணாய் பிறந்ததால்


துளி தேன் மிகை அமுது
நிறை மகிழ்வு சிறு ஊடல்
தித்திக்கும் தமிழ் கண்ட
திகட்டா காதல் கொண்டு
நான் பெற்றுடுத்த மகவு

வெண்மதி
அவள் முகம்

பிற்பகல் கலந்த
கிழ்வான சிகப்பு
அவள் நிறம்

பூத்துகுலுங்கும் ரோஜா
அவள் புன்னகை

அன்னம்போல் மேனி
எழில் வென்ற விழிகள்
காண திகட்டா குறும்புடன்
சர்வமங்கலமாய் பிறந்தவள்
என் செல்ல மகள் ...

புரிய இயலா சமூகத்தில்
உனை பிரசவித்து
கள்ளிப்பால் வருவதற்குள்
உனக்குமுன்
விடைபெறுகின்றேன்
நான் அன்றே பெண்ணாய்
பிறந்ததால் ...