May 29, 2010

அலைகளுடன் !


இணைவது தெரியாமல்
நதியும் பயணிக்கிறது
கடலும் காத்திருக்கின்றது ...

அலைகளுடன் !

May 8, 2010

வாழிடம் தேடி


தூண்டியவன் துயில் கொள்கிறான்
தூண்டப்பட்டவன் துக்கம் செய்கிறான்

தடையின்றி பயணிக்கிறது ஆக்கபூர்வமான
மனிதவளம் அழிவுப்பாதையில் ...

உணர்வுகளின் விளையாட்டில்
உயிர் தோற்கிறது
உரிமைகள் மீறப்படுகின்றது ...

சிந்திய உதிரமும் சிறுநொடியில்
மண்ணில் கலந்து தின்மமாகின்றது
வன்முறையின் நிறமும் சிகப்பு ...

இயன்றவன் இறையாண்மை பேசுகிறான்
இயலாதவன் அரசியல் பேசுகிறான்
பாவப்பட்ட மனிதமோ பல்லக்கில்
பயணிக்கிறது பாதாளத்தில் விழ ...

வடக்கும் தெற்கும்
கிழக்கும் மேற்கும்
திசையின்றி பயணிக்கிறது
வன்முறையற்ற வாழிடம் தேடி !

பெண்வாசம்


காற்றில் அசைந்தாடும்
கொடியும் மௌனம் மீட்டுகிறது
உன் துப்பட்டா
அதன் மேல் விழுந்ததால் ...
பெண்வாசம் சுவாசிக்க ...

நீ பிரசவத்திற்காக
உன் அம்மா வீட்டில் ...
உன்னுடன் நான் தினமும்
குளிக்கிறேன் !
குளியலறை சுவற்றில் நீ ஒட்டிய
உன் நெற்றிப் பொட்டுடன் ...

நித்திரையற்ற கனவுகளும்
நிஜமற்ற நினைவுகளும்
பொய் கூறா கவிதைகளும்
ஊடல்லற்ற காதலும்
இனிப்பற்ற சர்க்கரையும் போல்
நீயற்ற நம் வீடு ....

May 4, 2010

வந்தார்கள் பார்த்தார்கள் சென்றார்கள் ...



வசைகளுடன் கூடிய
அரைநாள் விடுப்பு
அடகு கடையில் மீட்டுவந்த நகை
பச்சைப்பட்டு...பருக்கள் மறைக்க
சிறிதாய் முகப்பூச்சு ...

தினசரி நாள்காட்டியில் அவள்
ராசிக்கு நேரே முயற்சி !

சம்பரதாய சடங்குகளுக்காக
கையில் தேனீர் கோப்பை
வாழைக்காய் பலகாரம்
செயற்கை வெட்கம்
சங்கடத்துடன் அவள் ...

வந்தார்கள் பார்த்தார்கள்
சென்றார்கள் ...

மௌனம் உடுத்திய சூழல்
மெதுவாய் உடைகிறது
அவளின் பொய் புன்னகையில்
இவையனைத்தும்
கடிதத்தில் தெரிவிக்கின்றோம்
என்ற பதிலுக்காக ...