Apr 28, 2010

அவளும் மழையும் ...



கண்களுக்குள் மின்னலாய்
உட்சென்றவள் இதயத்தில்
இடியாய் இறங்கிவிட்டாள்

காதல் மழை பொழியும்
தருவாயில் காற்றினில்
கலைந்த மேகம் போல்

நிஜங்களை கரைத்துவிட்டு
நினைவுகளை அசைபோட
கற்றுக் கொடுத்தவளுக்கு
தெரிய வாய்ப்பில்லை ...

வானம் பார்த்த பூமியின்
ஏக்கமும் ஏமாற்றமும்
அவளிடம் சினம் பூண்டு
மேலும் ரணம் கொள்ளவில்லை ...

அவளை வெறுக்கவுமில்லை...ஆனால்
விரும்புவதை தவிர்க்கிறேன்
என்னிடம் அவள் அதனையே
விரும்புவதால்...

Apr 26, 2010

ஆனாலும் ரசிக்கிறேன்



என்னவென்று தெரியவில்லை
ஏனென்றும் புரியவில்லை
எனை அறியாமல் சிரிக்கின்றேன்

சோப்புக்கட்டி கரைய குளிக்கிறேன்
சுடிதாரை பலமுறை மாற்றுகிறேன்
நெற்றிப்பொட்டை சிரிதாக்குகிறேன்
நொடிக்கொருமுறை முகம் பார்கிறேன்

வெட்கத்தால் சிவந்தது நான் மட்டும் அல்ல
என் வீட்டு கண்ணாடியும் தான்...இன்று
என் காதலனாய் உன்னை சந்திப்பதால்.....

இது காதலின் மொழியா அன்றில்
வெட்கத்தின் இலக்கணமா புரியவில்லை
ஆனாலும் ரசிக்கிறேன் எனை மறந்து
என் முகத்தில் பருக்கள் ...

Apr 13, 2010

நாமாய் பேசிய நாட்களை ...



உன் சில கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை
இபோதெல்லாம் கேள்விகளே
வாழ்கையாய் போனதால்

என் நோக்கம் உனை
காயப்படுத்துவது அல்ல
என் காயத்தில் புதைந்த
உனை வெறுக்கவும் முடியவில்லை
உனை விரும்ப நீயும் அனுமதிப்பதில்லை
இப்போதும் காதலிக்கிறேன் நீயும்
நானும் நாமாய் பேசிய நாட்களை ..

உனை பிரிந்து விடு என்று சொல்
எனை மறந்து விடு என்று சொல்லாதே ...
உனை விடுத்தது வேறொரு பெண்
நிச்சியமாக இல்லை என் வரலாற்றில் ...

உனை பிரிகிறேன்
பிறகெப்போதவது நீ
எனை சந்தித்தால்
சின்னதாய் ஒரு பொய் மட்டும் சொல்லடி
நான்  நலம் என்று...
காத்திருக்கிறேன் நாம் சந்திக்கபோகும்
அந்த நிமிடங்களை எண்ணி ...

Apr 8, 2010

தீக்குச்சி சொல்லும் கவிதை




கரும்பலகை பாடம் கற்றலின்றி
கருப்பு மருந்து புனைகிறார்கள்
பற்ற வைத்த நானும்
பற்றில்லாமல் தான் எரிகிறேன்
பாலகர்களின் உழைப்பினை எண்ணி

பாராட்டு விழா


"கல்வி கட்டாயமாக்கிய
நடுவண் அரசுக்கு
பாராட்டு விழா"

வண்ண சுவரட்டிகளை
நூறாய் பிரித்து
கட்டுகிறார்கள்

அகவை ஏழினை தொட்ட
சிறுவனும் சிறுமியும்
அச்சகத்தில் ...

Apr 5, 2010

இயந்திர உறவுகள்



9.30 - 5.00 p.m

வங்கியில் தாத்தா
பள்ளியில் பாட்டி
கல்லூரியில் அம்மா
ஐ.டியில் அப்பா
காப்பகத்தில் நான் ...

5.00 - 6.30 p.m

வரும் வழியில் எனை
அழைத்துக்கொண்டு
பாட்டி பின் தாத்தா
தொடர்ந்து அம்மா
இறுதியாய் அப்பா ...


6.30 - 8.30 p.m

அம்மாவும் அவள்
அம்மாவும் சமயலறையில்
தாத்தா தொலைக்காட்சியில்
அப்பா இணையதளத்தில்
பேசாத பொம்மைகளோடு
பேசிக்கொண்டு நான் ....


8.30 -

வழக்கம் போல்
மின்விசிறியின் சத்தமும்
விளக்குகள் உறங்க
இருண்ட அறையில் நானும் ...


விடுமுறை நாட்களில்
விடுகதை வாழ்க்கை
விடை தெரியும் முன்
அவர்கள் வேலைக்கான
விடியல் ...

வள்ளி முருகன் நெடுஞ்சாலை உணவகம்



அவருக்கு பொடியன்
அந்தம்மாவிற்கு தம்பி
சக பணியாளனுக்கு டேய்
மதுரைக்கு எலே சின்னு
கோவைக்கு டேய் ராசு...

அவளுக்கு "முருகா"
அவள் உச்சரிப்பில்
என் அம்மாவின் நினைப்பு
நானூறு மைல்களுக்கு அப்பாலும் ...

வைகறை உறக்கம் யாமப்பணி
ஒவ்வொரு பேருந்தின் ஒலியிலும்
கண்களில் நித்திரை கரையும் ...

தட்டி தட்டி எழுப்புவோம்
பயணிகளின் தூக்கம் கலைக்க
கல்லா நிறைக்க ...
சினம் சாபம் திட்டுகள்
பொருட்படுத்தாது ...

இளையராஜா பாடல் !
செவி நோகும் அளவு
இரைச்சலில் ...

நின்ற பேருந்து புறப்படுகையில்
ஏதோ சொந்தம் சொல்லிக்காமல்
செல்வது போல் ...

இம்முறையேனும் காசு சேர்த்து
நெல்லை வண்டிக்கு செல்ல வேண்டும்
ஓடி வந்த நான் அம்மாவை பார்க்க ...